Saturday, January 21, 2017

அறப்போராட்டம் - ரௌத்திரம் பழகுதமிழன் என்பவனின் அடையாளத்தை சிலகாலம் தன்னலம் கொண்ட தலைவர்கள்  தொலைத்து விட்டபோதும்,  மாணவர்கள் வழியாக காளைகளின் ஜல்லிக்கட்டு மூலமாக.. இந்த அடையாளம்  மீண்டும் வெளிப்படுகிறது, தொடர்ந்து வெளிப்படும்.

தமிழன் என்பவனின் வரையறை என்ன?

தமிழன் என்பவன் மதங்களை கடந்து இயற்கையின் வழி நிற்பவன். மதங்களை தாண்டி இந்த பூமியில் மானுடம் உயர்ந்து நெறியையும் அறத்தையும்  சார்ந்து வாழ  என்றும் மறையாத திருக்குறளை தந்தவன். அறத்தின் வழி என்றும் பொய்யாமொழி தந்து மனிதத்தின் மேம்பாட்டிற்கு சங்கம் நடத்திய ஞானத்தின் பேரினம் இதுவே. 

உழவை வந்தனம் செய்து விவசாயத்தை மேம்படுத்தி வல்லபம் செய்த சுந்தரானந்தர் சித்தன் முதல் நிகழ் காலத்தில் வாழந்த நம்மாழ்வார் வரை இயற்கை விவசாயத்தை உலகிற்கு அடையாளம் காட்டும் இனம்,
நவபாஷாணம் செய்த ரசவாத தலைவன் போகர் பெருமான் முதல் நிகழ் காலம் வரை வாழந்த அணு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதி ஆனா எந்த ஆர்ப்பாட்டமும் இல்லா பாமர வாழ்க்கை கொண்ட அப்துல்கலாமும் வந்த புண்ணிய பூமி இது . அவ்வை தாய் அரசர்களிடம் தூதாய் சென்று போரை நிறுத்தி பெண்மையின் உரிமையை ஞானத்திலும், இலக்கயத்திலும், தமிழ் புலமையிலும் பதிவு செய்தவர். பசி தீர்க்க உணவு தந்த வள்ளல் பெருமான் வைத்த அணையா அடுப்பினை தாங்கி நிற்கும் அக்னி பூமியே இது.
வடக்கிலிருந்து வந்து காளைகளை மேய்க்க தன உடலையும் மாற்றி திருமூலன் அய்யன் உரைத்தது "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யும் மாறே". இவ்வாறு இறைவன் முதல் இயற்க்கை வரை உள்ள அனைத்தையும் சித்த மருத்துவத்தையும், மணி மந்திர, அவுடதமும் தந்தது இந்த பூமியே 


இயற்கைக்கு எதிரான அடக்கு முறை எவ்வழியாக வந்தாலும் அதனை எதிர்த்து ரௌத்திரம் பழகும் இனமே தமிழ் இனம். இயற்கையக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் தன் உரிமை பறிபோனது போல உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்காக போராடுபவன். தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த வறுமையை சாடும் பாரதி தான் இந்த இனத்தின் அடையாளம். உலகத்தின் அணைத்து தேவர்களின் "போரின் சேனாதிபதியான" முருகப்பெருமானை தமிழ் கடவுளாக கொண்டு பல்லாயிர வருடங்களாக வீரத்தையும் தாண்டி கம்பீரமாக வாழும் இனம். 

சித்திகர்களின் இனமாக, மொழியாக, இயற்கையுடன் ஒத்து வாழந்து இந்த பூவுலகத்திற்கு வாழ்க்கை நெறியும், சித்தர்கள் நீதி வழங்கும் உன்னதமான இனமே தமிழ் இனம்,நந்திதேவர் பெருமானின் அகோர வெளிப்பாடே இன்றைய இளைஞர்கள் அறப்போராட்டம்.  இது ஆரம்பமே. இந்த இனம் தொடர்ந்து மரபணு மாற்றப்பட்ட விதைகள், விவசாயிகள் எதிரான கொடுமைகளை உலகத்தின் சார்பாக தொடர்ந்து அறவழியில் போராடி உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழும். 
இயற்கையை சார்ந்து வாழ்பவனே நற்தமிழனின் அடையாலம். அவன் பூவுலகில் மற்றவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பத்திற்கு இலக்கணம். அவன் என்றும் சன்மார்க்க  நெறியின் அடையாளம்